Manjula Pichai
Journalist, Niruban Mediaமைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தற்காலிகமாக நாட்டை விட்டு செல்ல வேண்டாம்; அமெரிக்காவிலேயே பணி மேற்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டதாம்
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பிரதான வாயிலாக விளங்கும் H1B விசா தற்போது கடுமையான சவாலில் சிக்கியுள்ளது. மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் இவ்விசா, அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். பெரும்பாலானோர் இதனை நிரந்தர அமெரிக்கக் குடியுரிமைக்கான முதல் படியாகக் கருதுகின்றனர்.
இதனால் விடுமுறைக்காக தற்காலிகமாக நாடு திரும்பிய H1B பணியாளர்களுக்கும் அழுத்தம் ஏற்பட்டது. செப்டம்பர் 21-ஆம் தேதிக்குப் பின்னர் அமெரிக்கா திரும்புபவர்கள் அதிக கட்டணச் சுமையைச் சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களிடம் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு அறிவுறுத்தின.
தற்போதைய அமெரிக்க நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, விசா விண்ணப்பக் கட்டணமும் நீட்டிப்பு செலவும் 8 லட்சம் ரூபாயிலிருந்து 88 லட்சம் ரூபாயாக ($100,000) உயர்த்தப்பட்டுள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி, இத்திட்டம் செப்டம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்தது.
தற்சமயம் H1B விசா வைத்திருப்போர் சுமார் 5 லட்சம் பேர். இவர்களில் 71% பேர் (3.5 லட்சம்) இந்தியர்கள். 12.5% சீனர்கள், 1% கனேடியர்கள், 0.9% தென் கொரியர்கள், 0.8% பிலிப்பைன்ஸ் நாட்டு நிபுணர்களும் இந்த விசாவைக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க மென்பொருள் திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் சுமார் 50% பணிகளை அவுட்சோர்சிங் மூலம் மேற்கொள்கின்றன. எனவே, H1B விசா விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியா–அமெரிக்க வர்த்தக உறவுகளையும், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறையையும் இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் சூழல் நிலவுகிறது.
விசா கட்டண உயர்வின் விளைவாக நிறுவனங்கள் மூன்று சாத்தியக்கூறுகளை எதிர்கொள்கின்றன: வெளிநாட்டு ஊழியர்களை தாயகம் திரும்ப அனுப்புதல், ஒருவருக்குச் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்து பணி தொடரச் செய்வது அல்லது இத்தகைய முதலீடு வருமானத்துக்கு ஏற்ற வாய்ப்புகளை வருங்காலங்களில் ஏற்படுத்தித் தருமா என்ற சந்தேகம். அமெரிக்க நிர்வாகம் “உள்ளூர் குடிமக்களைப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்கலாம்; வெளிநாட்டவர்களுக்கு இத்தகைய அதிகச் செலவு தேவையில்லை” என்று வலியுறுத்துகிறது.
விசா கட்டண உயர்வு வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்ல. இது இந்தியாவுக்கு எதிரான அரசியல் அழுத்தத்தின் ஓர் வடிவமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தியா–ரஷ்யா வர்த்தக ஒப்பந்தங்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் வழியாக இந்தியா மேற்கொண்டுள்ள துறைமுக முதலீடுகள் ஆகியவற்றில் அமெரிக்க அதிருப்தி நிலவும் நிலையில், இந்த விசா கட்டண உயர்வு இந்திய அமெரிக்க இணக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது
இந்நிலையில் சீனா, அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு புதிய “K விசா” திட்டத்தை அறிமுகப்படுத்தி, உலகளாவிய அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் திறமையான இளம் வெளிநாட்டு வல்லுநர்களை ஈர்க்க முயற்சிக்கிறது. இந்த விசா, முன் வேலை வழங்குநர் தேவையின்றி, கல்வி, ஆராய்ச்சி, தொழில்முனைவோர் மற்றும் வணிகத் துறைகளில் பங்கேற்பதற்கும், பல முறை நுழைவு மற்றும் நீண்ட காலம் தங்குவத்திற்கும் அனுமதிக்கும். அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வால் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னணியில், சீனா திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை தன்பக்கம் ஈர்க்க திட்டமிடுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு, “அதிக திறமை வாய்ந்தோர் மட்டுமே H1B மூலம் அமெரிக்கா செல்ல வேண்டும்” என்பதே. இதனால், சாதாரண இந்திய பொறியாளர்கள் அந்நாட்டு வாய்ப்புகளிலிருந்து விலக்கப்படலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற மாணவர்களே பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மையான தேர்வாக மாறும் வாய்ப்பு உள்ளது.
H1b விசா கட்டண உயர்வு தற்காலிகமாக (ஒரு ஆண்டு) அமல்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் மேலும் கடுமையாக்கப்படலாம். ஒரே நேரத்தில், இந்தியாவுக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான H1B ஊழியர்கள் உள்ளூர் வேலை சந்தையில் கடுமையான போட்டியை உருவாக்கக் கூடும். நீண்ட காலத்தில் இது இந்திய தொழில்நுட்ப சூழலை வலுப்படுத்தினாலும், உடனடி தாக்கம் மிகப் பெரிய சவால்களை ஏற்படுத்தும்.
H1B விசா, இந்திய திறமையை அமெரிக்க வாய்ப்புகளோடு இணைக்கும் முக்கிய பாலமாக இருந்து வந்தது. எதிர்வரும் மாதங்கள், இது தற்காலிக குழப்பமா அல்லது உலகளாவிய திறமை இடம்பெயர்வை மாற்றியமைக்கும் நிலையை உண்டாக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.