மாவீரன் நெப்போலியன் கண்ட பிற்கால பிரான்ஸின் வரலாறு

பிரான்ஸ் அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை “அறுகோணி” (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் இரண்டாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் பிரான்சிலேயே உள்ளது.

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், படைத்துறை, அரசியல் ஆகியவற்றில் வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்சு விளங்கி வருகிறது. 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பெரும் பகுதிகளைப் பிரான்சு தனது குடியேற்றவாத ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய குடியேற்றவாதப் பேரரசைப் பிரான்சு கட்டியெழுப்பியது. அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய குடியேற்றவாதப் பேரரசாக விளங்கியது.

பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்சின் அரசியலமைப்பு, அந்நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது. உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வாங்கு திறன் சமநிலை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது நிலையில் உள்ள இதன் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக விளங்குகிறது.

திரட்டிய வீட்டுச் செல்வ அடைப்படையில் பிரான்சே ஐரோப்பாவில் செல்வம் மிகுந்த நாடும், உலகில் நான்காவது பணக்கார நாடும் ஆகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்சு, உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்சு உள்ளது.

பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை, ஜி8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று. அதுமட்டுமில்லை,

பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடும் கூட. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள்.

இப்படிப்பட்ட ப்ரான்சின் வரலாற்றை முழுமையாக விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கி.மு. 1500  க்கும் 500க்கும் இடைப்பட்ட ஆயிரம் வருட காலக்கட்டத்தில் செல்டிக் கவுல்ஸ் எனப்படும் இனத்தினர் ப்ரான்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தனர். இவர்கள் கி.மு. 600 வாக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் கிரேக்கர்களுடன் தங்கள் வாணிகத் தொடர்புகளை உருவாக்கினர். அடுத்த 300 வருடங்களில் அந்த செல்டிக் பாரிசி எனும்  பழங்குடிகளுக்கென குடியிருப்புகள் உருவாகின. அவர்களுக்கென கவுல் எனும் ராஜ்ஜியமும் உருவானது.                                 

கவுல் இராஜ்ஜியமானது ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அவன் வடக்கு ப்ரான்சில் உள்ள விஸ்ஸான்ட் என்ற பகுதியைப் பயன்படுத்தி பிரிட்டனுக்குள்ளும் ஊடுருவினான். 5 ஆம் நூற்றாண்டு வரை கவுலியா மீது நீடித்த ரோமானியர்களின் ஆளுகையின் விளைவாக, அநேக மாற்றங்கள் உண்டாகத் தொடங்கின. ஆம். கவுலியர்கள் காலப்போக்கில், தமது மொழியான கவூலியை விட்டு ரோமர்களின் மொழியான இலத்தீனை தொடர்பு மொழியாக பயன்படுத்தத் தொடங்கினர். அது பின்னர் பிரெஞ்சு மொழியாக மாற்றம் கண்டது.

கலாச்சார அளவிலும் ரோமர்களின் வழக்கங்களே கவுலியர்களின் வழக்கங்களாகின.

ரோம தொடர்பின் வாயிலாக கோவில்களும் பொதுக்கட்டிடங்களும் உருவாகின. அவை இன்றைய ப்ரான்சின் தொன்மை அடையாளங்களாக விளங்குகின்றன. இதற்கிடையில், 5-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரோமானியப் பேரரசு ஜெர்மானியப் பழங்குடிகளால்

தொடர் தாக்குதல்களை சந்தித்து வீழ்ச்சி அடைந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த அன்றைய ஐரோப்பிய இனங்களும் அவர்களின் பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக அன்றைய கவுலியாவான ஃப்ரான்ஸூம் விடுவிக்கப்பட்டது.

ரோமானியப் பேரரசுக்கு ஓர் முடிவு கட்டிய ஜெர்மானியப் பழங்குடிகள் மேலும் பலமடைந்து, ஐரோப்பா எங்கும் பரவி ஆங்காங்கே வாழ்ந்த பல்வேறு இனங்களோடு கலந்து புதிய அரசுகளை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள். ரோமன் பிரிட்டன் என்ற தீவுக்கூட்டங்களின் பகுதியில் ஜெர்மானிய ஆங்கிலோ மற்றும் சாக்ஸன் இனத்தவர் குடியேறி உருவாக்கிய சிற்றரசுகள் கி.பி. 927-இல் கிரேட் பிரிட்டன் எனும் ராஜ்யமாக உருவெடுத்தது. இதுமட்டுமில்லை, ஐரோப்பாவின் ஏனைய நாடுகளும் கூட இவை போன்ற ஜெர்மானியர்களின் இடம்பெயர்வுகளாலும் இனக்கலப்புகளாலும் தான் உருவாகின. ஐரோப்பா கண்டம் புதிய இனங்களை பெற்றெடுக்கத் தொடங்கிய கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டு வரையிலான இந்தக் காலக்கட்டத்தை, migration period அதாவது இடம்பெயர்வு காலம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த இடம்பெயர்வு காலக்கட்டத்தில் இன்றைய ஃப்ரான்ஸ் எப்படி உருவானது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பிரான்ஸ் என்ற பெயர்… மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் அப்பகுதிகளில் குடியேறிய ஜெர்மானிய ஃப்ராங்க் இன மக்களின் தொடர்பில் உருவானது. அதாவது, ஃப்ரான்சு என்பது, “பிராங்க் மக்களின் நாடு” எனும் பொருள்தரும் பிரான்சியா என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஆக, இன்றைய ஃப்ரெஞ்ச் இனத்தவர்கள், பண்டைய கவுலிய பழங்குடிகளோடு பிரிட்டனின் செல்டிக் இனத்தவரும், ஜெர்மனின் ஃப்ராங்க் இனத்தவரும் கலந்து உருவானவர்களே என்பதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள இனத்தவர்களுக்குள்ளே எப்படி ஓர் அடிப்படை பண்டைய வரலாறு இருக்கிறதோ அப்படியே தான் ஐரோப்பாவின் பிரிட்டிஷ், ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய மற்றும் இத்தாலிய இனத்தவர்களிடையேயும் ஓர் அடிப்படை வரலாறு இருக்கிறது. அதிலும், ஃப்ரான்ஸ் நாடானது, ஐரோப்பாவின் இதர முக்கியமான நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் பண்டைய இனங்களின் பாதிப்புகளையும் கலப்புகளையும் கொண்டு உருவாகி இருப்பது ஆச்சரியம் தருகிறது. சரிஇனி ஃப்ரான்ஸை கோலோச்சிய அதனை உலக அரங்கில் மிக முக்கியமான ஓர் நாடாக்கிய அதன் அரசுகளையும் ஆளுமைகளையும் குறித்து அலசி ஆராய்வோம்

ரோமானியப் பேரரசில் இருந்து விடுபட்ட ஃப்ரான்ஸை, கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை ஃப்ரான்கிஷ் மெரோவிங்கியன் மற்றும் கரோலிங்கியன் எனும் இரண்டு ராஜ்ஜியங்கள் ஆண்டன. அதில் கரோலிங்கியன் பேரரசிலிருந்து எழுச்சி கண்ட சார்லெமெக்னே என்பவர், அன்றைய இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் பகுதிகளையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, மேற்கு ஐரோப்பாவின் முதல் பேரரசர் ஆனார். இவரது ஆட்சிக்காலத்தில் தான் ஃப்ரான்ஸ் முதன்முறையாக ஐரோப்பா கண்டத்தில் அகண்ட பரப்பு கொண்ட ஆட்சி அதிகார வல்லரசாக உயர்ந்தது. 

சார்லெமெக்னெவின் கரோலிங்கியன் பேரரசில் இருந்துதான் நவீன ப்ரான்ஸ், ஜெர்மனி நாடுகள் பிரிந்தன. 5 ஆம் நூற்றாண்டில் சிதறுண்ட ரோமப் பேரரசிற்கு பிறகு, மேற்கு ஐரோப்பாவை வெற்றிகரமாக இணைத்த பெருமை சார்லெமெக்னேவையே சேரும். இடையில் மூன்று நூற்றாண்டுகள் ஐரோப்பாவில் இடம்பெயர்வுகளும் இனக்கலப்புகளும் சிற்றரசு ஆளுகைகளுமே நீடித்து வந்தன. ஆக, நவீன ஐரோப்பாவில் இடம்பெற்றிருக்கும் நாடுகளின் அடிப்படை உருவாக்கத்திற்கு சார்லெமெக்னெவின் ஆட்சிக்காலமே அடித்தளம் அமைத்தது என்பதால், அவர் ஐரோப்பாவின் தந்தை என போற்றப்படுகிறார்.

சாதனை புரிந்த சார்லெமெக்னெவுக்குப் பிறகு, கி.பி. 987-இல் ஹ்யூக் கேபெட் என்பவர் தலைமையில் கேபிடயன் ராஜ்ஜியம் உருவானது. அது துவங்கிய காலக்கட்டத்திலிருந்து, அடுத்த 800 வருடங்களுக்கு ஃப்ரான்ஸ் ஐரோப்பாவின் அதிபலம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக ஆளுமை கண்டது.

ஐரோப்பா கண்டத்தில் மிக பலம் வாய்ந்த பகுதி மேற்கு ஐரோப்பா தான். ஏனெனில், இப்பகுதியில் தான் ப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பாவின் அடையாளமான நாடுகள் எல்லாம் இருக்கின்றன. இந்நாடுகளை உள்ளடக்கி ஒருங்கிணைத்துதான் அன்றைய ரோமானியப் பேரரசு உலகத்தையே ஆண்டு வந்தது. இதே நாடுகளை உள்ளடக்கி தான் ஃப்ராங்சின் சார்லெமெக்னே இரண்டாவது மேற்கு ஐரோப்பியப் பேரரசு ஒன்றை உருவாக்கினார். அதே மேற்கு ஐரோப்பிய நாடுகள் தான் வெஸ்டர்ன் யூரோப்பியன் யூனியன் என்ற பெயரில் 2012 வரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. அவைதான் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சரிஃப்ரான்சின் அதிகார ஆளுமைகளில் அடுத்த முக்கியமானவர் யார் என்பதைப் பார்ப்போமா?

ஃப்ரான்ஸ் பிரதேசத்தை ஆண்ட மன்னர்களில் புகழ்பெற்றவர் பதினான்காம் லூயி. 1643-இல் தன் நான்கு வயதில் ஃப்ரான்ஸ் தேசத்தின் மன்னராக அரியணை ஏறிய இவர், தன் 27 ஆம் வயதில் முழுமையான ஆளும் அதிகாரத்தைப் பெற்றார். இவர்தான் ஐரோப்பிய அரசர்களின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 72 வருடங்கள் 110 நாட்கள் அரசாண்ட அரசன். ப்ரான்சின் முடியாட்சி வரலாற்றில் அதிபலம் வாய்ந்த மன்னனாக விளங்கிய பதினான்காம் லூயி, ப்ரான்சில் எஞ்சியிருந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசனிடமே எல்லா அதிகாரங்களும் மையப்படுத்தப்படும் ஆளும் முறையை முதன்முறையாகக் கொண்டு வந்தார். இவருடைய காலத்தில் ப்ரான்ஸ் ஐரோப்பிய கண்டத்தில் அதிபலம் வாய்ந்த நாடாக உச்சம் தொட்டது.

பெரும் புகழோடு அரசாண்ட 14 ஆம் லூயிக்குப் பிறகு ப்ரான்ஸின் அரியணை ஏறிய அவரது பரம்பரையினர் குடிமக்களின் கோபத்திற்கு ஆளாகினர். மாற்றங்கள் இல்லாத பழைய அரச சட்டங்கள், காலத்தின் தேவைகளுக்குப் பொருந்தாமல் முரண்பாடுகளாய் இருப்பதை வால்டேர், ரூசோ மற்றும் மான்சடெஸ்க்யூ போன்ற புரட்சியாளர்கள்,  குடிமக்களுக்கு எடுத்துரைத்து அறிவொளி வீச செய்தனர். அவர்களுடைய புரட்சிக் கருத்துகளால் ஏற்பட்ட விழிப்புணர்வும், அதிகார வர்க்கத்தால் தொடர்ச்சியாக நொறுக்கப்படுகிற நிலைகளும் சேர்ந்து உலகப்புகழ்பெற்ற ஃப்ரெஞ்சுப் புரட்சியை நோக்கி உழைக்கும் வர்க்கம் நகர்த்தப்பட்டது.  

ஆஸ்திரியா, பிரிட்டன் மற்றும் பிரஷ்யா நாடுகளுக்கு எதிராக ஏழு வருடங்கள் 15ஆம் லூயி செய்த போர்கள், ஃப்ரான்சை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்பவையாக மாறின. அப்போர்களின் விளைவாக, கனடா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியாவில் தனக்கென காலனி ஆதிக்கப்பகுதிகளாக்க மலர்ந்து கொண்டிருந்த குடியேற்றப் பகுதிகளை ப்ரான்ஸ் பிரிட்டனிடம் இழந்தது. முடியாட்சியில் ஏற்பட்ட இதுபோன்ற தோல்விகளும் அதன் விளைவுகளும் குடியாட்சி கருத்துகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. அந்நேரத்தில் அமெரிக்கப் புரட்சியால் அந்நாட்டில் குடியாட்சி மலர்ந்ததைக் குறித்த செய்திகளும் ஃப்ரான்சில் அம்முறையின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் தன் குடிமக்களை மூன்று விதமான எஸ்டேட் முறைகளுக்குள் லூயி பரம்பரையினர் வகைப்படுத்தி வைத்திருந்தனர். அதில் அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமான நிலப்பிரபுக்கள் முதல் எஸ்டேட்டாகவும், ஆன்மீகம் தாண்டி அரசியல் வரைக்கும் கோலோச்சிய மதகுருமார்கள் இரண்டாம் எஸ்டேட்டாகவும், 90 சதவீத உழைக்கும் மக்கள் மூன்றாம் எஸ்டேட்டாகவும் வரையறுக்கப்பட்டிருந்தனர். மூன்று எஸ்டேட்களுக்குமென பொதுச்செயலாளர் பிரதிநிதிகள் இருந்தார்கள். ஆனால், 98 சதவீத உழைக்கும் மக்களுக்கும் 2 சதவீத அதிகார வர்க்கத்திற்கும் என இணையான அளவு பிரதிநிதிகளே இருந்தனர்.

இதனை எதிர்த்து, தங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வாக்களிக்கும் பிரதிநிதித்துவ உரிமை உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது மூன்றாம் எஸ்டேட். அது இதர இரண்டு எஸ்டேட்களால் நிராகரிக்கப்பட, மக்கள் புரட்சி வெடித்தது. புதிய தேசிய சபை உருவாகி, அரசியலமைப்பு கோரப்பட்டது. தொடர்ந்து 1792 செப்டம்பரில் ஃப்ரான்ஸ் அரசியலமைப்புக்குட்பட்ட குடியராக அறிவிக்கப்பட்டது.

புதிய சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டன. மதகுருமார்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. ஆலயங்கள் மூடப்பட்டன. மக்கள் புரட்சிக்கு எதிர்த்து நின்ற ஆயிரக்கணக்கானோர் டஞ்சன் போன்ற இடங்களில் அடைக்கப்பட்டு பின்னர் கில்லட்டின்களால் தலை துண்டிக்கப்ப்பட்டனர். மன்னர் 16-ஆம் லூயியும் அவரது மனைவியும் கூட புரட்சியாளர்களின் கில்லட்டின்களுக்கு பலியாகினர். 1793 முதல் 1794 ஜூலை வரை ஃப்ரான்ஸ் தேசமெங்கும் ரத்த ஆறு ஓடியது. அதற்குப் பிறகு 5 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி மன்றக் குழு ஒன்று சார்லஸ் பராஸ் தலைமையில் ஃப்ரான்ஸ் குடியரசின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

குடியாட்சி கண்டுவிட்டால் போதும். எல்லாம் மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஃப்ரான்ஸ் மக்களை பெரிய அளவில் திருப்தி செய்துவிடவில்லை குடியாட்சி முறை. ஏனெனில், உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம், வெளிநாட்டு தொல்லைகள் மறுபுறம்பொருளாதார நெருக்கடிகள் இன்னொரு புறம் என குழப்பங்களுக்கு நடுவில் நகர்ந்து கொண்டிருந்தது ஃப்ரான்சின் நிலை. 5 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழுவின் ஆட்சி முறை அன்றைய நிலைக்கு ஏற்றதாய் இல்லை. தேவை ஒரு தன்னிகரற்ற தலைவன் என ஃப்ரான்சின் குடிமக்கள் ஏங்கிய நிலையில் தாழ்ந்த நிலையிலிருந்து வெளிப்பட்டான் அந்த தலைவன். அவனைப் பற்றிப் பேசாமல் ஃப்ரான்சின் வரலாறை முழுவதுமாக பேசி விட முடியாது. அவன் இன்றும் வரலாற்றாசிரியர்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் ஆட்சியாளன். யார் அவன்?  

நெப்போலியன் போனபர்ட். ஃப்ரான்ஸ் இராணுவத்தின் கடைநிலை போர்வீரனாக பணிபுரிந்து வந்த இந்தப் போர்வீரன், தன் வீரத்தினாலும், போர் நுணுக்கங்களாலும் படிப்படியாக உயர்ந்து, ஃப்ரான்சின் இராணுவப்படைத்தளபதி ஆனார்.  ஃப்ரான்ஸ் குடியரசுக்கு சுற்றியிருக்கிற நாடுகளால் இருந்துவந்த அச்சுறுத்தல்களை எல்லாம் அடக்கியும், அவற்றை வென்றும் ஐரோப்பாவின் முதல் குடியரசுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துத்தந்தார் நெப்போலியன். பிற நாடுகளை வென்று அவற்றின் மூலம் கிடைத்த செல்வத்தை ஆட்சியாளர்களுக்கு அனுப்பி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்வதற்கு உதவி செய்தார்.

இதனால் நெப்போலியனுக்கு உள்நாட்டில் ஆளும் ஆட்சியாளர்களையும் தாண்டி பெரும் மதிப்பும் மரியாதையும் வரவேற்பும் ஏற்பட்டது. இதன் மூலம் நெப்போலியன் ஃப்ரான்சின் தனிப்பட்ட அரசியல் சக்தியாக உருவெடுத்தார். ஒரு கட்டத்தில் ஃப்ரான்சின் ஆளுநராக உயர்ந்த நெப்போலியன், வாழ்நாள் முழுவதும் பதவியில் இருக்கும்படியாக தன்னைப் பேரரசராகவும் முடிசூட்டிக்கொண்டார்.

நெப்போலியனின் காலத்தில் ஃப்ரான்ஸ் ஐரோப்பாவின் உறுதியான நாடாக உருவெடுத்தது. பிரிட்டன் உள்பட தன் ஆட்சிக்காலத்தில் தனக்கும் தன் குடிமக்களுக்கும் தொடர் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த நாடுகளை எல்லாம் தொடர் போர்களால் சமாளித்துக்கொண்டே இருந்தார் நெப்போலியன். அவரது படைகள் ரஷ்யாவின் மாஸ்கோவையும் ஒருகட்டத்தில் கைப்பற்றி ஐரோப்பாவை ஆச்சரியப்படுத்தின.

எங்கும் முடியாட்சியே நிகழ்ந்து கொண்டிருந்த ஓர் கண்டத்தில் ஃப்ரான்ஸ் மட்டும் குடியரசானதுபிரிட்டன், ஆஸ்திரியா போன்ற முடியாட்சி நாடுகளுக்கு அதிர்ச்சியை தருவதாக அமைந்தது. அந்நாடுகளை ஆண்ட அரச பரம்பரைகள், ஃப்ரான்சின் குடி மக்களைப் போலவே தங்கள் குடிமக்களும் குடியாட்சியைக் கோரிவிடக்கூடாது என்ற அச்சத்தில் தொடர்ந்து ஃப்ரான்ஸிற்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். இந்த தொல்லைகள் நெப்போலியனின் காலத்தில் உச்சக்கட்டமாக இருந்தன. பல்வேறு மக்கள் நல சீர்திருத்தங்களை புகுத்தி, நிர்வாகத்திறமையுடன் செயல்பட்ட நெப்போலியனை செயல்பட விடாமல் தடுப்பதும், ஃப்ரான்சில் உள்நாட்டுக் குழப்பம் விளைவிப்பதுமே ஐரோப்பிய அரசாட்சிகளின் வேலைகளாக இருந்தன. ஆனால், அவற்றையும் சமாளித்து, உலகப்புகழ்பெற்ற தன் சீர்திருத்த சட்டங்களையும் செயல்படுத்திக்கொண்டே இருந்தார் நெப்போலியன்.

நெப்போலியன் தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த சட்டங்களை நெப்போலியனிக் கோட் அல்லது கோட் நெப்போலியன் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவை 1804 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்த சிறந்த சட்டங்களின் தொகுப்பாக இருந்த இந்த நெப்போலியனிக் கோட், ஐரோப்பாவை தாண்டி பல்வேறு வளரும் நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில், சட்டங்களை மறு உருவாக்கம் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு நெப்போலியனிக் சட்டங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நெப்போலியனிக் கோட் பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுவதற்கு தடை விதித்தது. தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்கு சுதந்திரம் அளித்தது. அதிகபட்ச தகுதிகள் கொண்டவர்களே உயர் பதவிகளில் அமர வேண்டும் என வலியுறுத்தியது.

நெப்போலியன் கொண்டுவந்த சட்டங்கள் இன்றுவரை ஃப்ரான்சில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஃப்ரெஞ்சு பிறப்பின் அடிப்படையில் மட்டுமே சலுகை வழங்குவதை அன்றே நெப்போலியன் அரசு தடை செய்ததால் தான், ஃப்ரான்சில் குடியேறும் வெளிநாட்டவர்களால் ஃப்ரெஞ்சு குடியுரிமை பெற்று சலுகைகளை அனுபவிக்க முடிகிறது. தன் குடிமகன் அதற்கு முன் எந்த நாட்டவராய் இருந்தாலும் அவர்களை ஃப்ரான்ஸ் அரசு நம்புகிறது. அதனால் தான் கமான்டோ போன்ற இராணுவம் சார்ந்த வேலைகளில் கூட இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் அங்கம் வகிக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நெப்போலியன் கொண்டு வந்ததற்கு அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

ஆம். நெப்போலியன் பிறப்பால் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் இல்லை. ஃப்ரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த கோர்சிகா எனும் தீவை சேர்ந்த கோர்சிகர் எனும் இனத்தைச் சேர்ந்தவரே. அவர் ஃப்ரான்சின் இராணுவப் பள்ளியில் சிறுவயதிலேயே சேர்க்கப்பட்டார். தான் அதி திறமை சாலியாக இருந்தும், ஃப்ரான்ஸ் நாட்டின் சட்டங்கள் தகுதியற்றவர்களுக்கே சாதகமாய் இருந்து பிறப்பின் அடிப்படையிலேயே எல்லா சலுகைகளையும் பணி உயர்வுகளையும் வழங்கியது அவரை வெகுவாக பாதித்திருக்க வேண்டும். அதுதான் அவரது சட்டங்களில் பிறப்பு அடிப்படையிலான சலுகைகளுக்கு தடை, அதிகபட்ச தகுதிகள் உடையவர்களுக்கே அரசு வேலை என்பவையாக வெளிப்பட்டன எனலாம்.

ஃப்ரான்சின் வரலாறு, அதன் புகழ்பெற்ற ஆட்சியாளர்கள் பற்றிப் பார்த்தோம். இனி அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் ஒரு பார்க்கலாம் வாருங்கள்

உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் எனப் பெயரெடுத்த பாரிஸ் தான் ஃப்ரான்சின் தலைநகர். ஃப்ரான்சின் மிகப் பெரிய நகரமும் இதுவே. இந்நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு… அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் (quais), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *