பிரிட்டனிடம் இருந்து பிரிந்த நவீன அமெரிக்காவின் வரலாறு!

பிரிட்டனின் காலனி பிரதேசமாக மாறிய அமெரிக்கா!

நவீன உலக வரலாற்றில், நூறாண்டுகள் தாண்டியும் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த பெருமை ’கிரேட் பிரிட்டனுக்கு உண்டு. உலகின் மொத்த மக்கள் தொகையில், 5-இல் ஒரு பகுதி மக்கள், ஒருகாலத்தில் கிரேட் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தனர். தன் வலிமை வாய்ந்த கடற்படையைக் கொண்டு, பிரிட்டன் உலகின் பல பகுதிகளையும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்ரிக்கா என உலகின் பல நாடுகளும் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததுபோல, இன்றைய வல்லரசான அமெரிக்காவும் ஓர் காலத்தில் பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது. 

ஐரோப்பிய குடியேற்றங்களால் உருவான அமெரிக்கா!

கி.பி. 1501-இல் அமெரிக்கோ வெஸ்புகி ஓர் புதிய கண்டத்தை கண்டுபிடித்தார். அவர் பெயரைக் குறிக்கும் விதமாக அமெரிக்கா என்ற பெயரில் அழைக்கப்படத் தொடங்கிய அந்தக் கண்டத்தில், கி.பி.1606-லிருந்து 1670 வரையிலான காலக்கட்டத்தில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து தனி மனிதர்களும், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் குடியேற்றங்களை அமைக்கத் தொடங்கினர். அன்றைய காலக்கட்டத்தில், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகள் ஒன்றிணைந்த ’கிரேட் பிரிட்டன்’ எனும் கூட்டரசு உருவாகி இருக்கவில்லை. அதனால் அன்றைய பிரிட்டிஷ் அமெரிக்கக் குடியேற்றங்கள், ’COLONIES OF ENGLAND’ என்றே அழைக்கப்பட்டு வந்தன.

ஆனால், 1707-ல் இங்கிலாந்துடன் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகள் இணைந்து GREAT BRITAIN அதிகாரபூர்வமாக உருவானதில் இருந்து, ’COLONIES OF GREAT BRITAIN’ என அழைக்கப்படத் தொடங்கின.

காலனி ஆதிக்கக் காலத்தில் இந்தியா எப்படி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருந்து ஆட்சி செய்யப்பட்டதோ, அப்படியே பிரிட்டிஷ் அமெரிக்காவும் லண்டனில் இருந்தே ஆட்சி செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சி மொழியான ஆங்கிலமே அதன் ஆட்சி மொழியாகவும் இருந்தது.

’175 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை ஆளுகை செய்த கிரேட் பிரிட்டன்!

அமெரிக்காவில், பிரிட்டிஷ் குடியேற்றங்கள் நிகழ்ந்த அதே காலக்கட்டத்தில், ஃப்ரென்ச் மற்றும் ஸ்பானிஷ் குடியேற்றங்களும் நிகழ்ந்தன. இந்திய சமஸ்தானங்களைக் கைப்பற்றுவதில் இந்நாடுகளுக்குள் எப்படி போட்டியும் போர்களும் நிகழ்ந்தனவோ, அமெரிக்க பகுதிகளைக் கைப்பற்றுவதிலும் அவற்றிற்குள் அப்படிப்பட்ட போர்கள் நிகழ்ந்தன. ஆனாலும், போட்டி நாடுகளை வென்று, பெரும்பான்மை இந்தியாவை பிரிட்டன் தன் காலனியின் கீழ் கொண்டுவந்தது போல,  பெரும்பான்மை அமெரிக்காவும் பிரிட்டிஷ் காலனிகளாய் ஆனது. 

அமெரிக்காவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் காலனி ஆதிக்கம் கி.பி. 1607 முதல் 1786 வரைக்கும் இருந்தது. இந்த காலனி ஆதிக்கப் பகுதிகள் ‘பிரிட்டிஷ் அமெரிக்கா’ மற்றும் ‘பிரிட்டிஷ் வெஸ்ட் இண்டிஸ்’ என அழைக்கப்பட்டன. அமெரிக்காவை முதலாவதாகக் கண்டுபிடித்த கொலம்பஸ் அதற்கு ‘வெஸ்ட் இண்டிஸ்’ என பெயரிட்டதால் ‘பிரிட்டிஷ் வெஸ்ட் இண்டிஸ்’ என்ற பெயரிலும் பிரிட்டிஷ் அமெரிக்கா அழைக்கப்பட்டது.  

விடுதலைக்கு வித்திட்ட அமெரிக்க புரட்சிப்போர்!

’பிரிட்டிஷ் அமெரிக்கா’ என்ற பெயரில் இயங்கி வந்த இன்றைய அமெரிக்காவின் அன்றைய 13 காலனிகளும், தங்கள் மீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் யுத்தத்தில் ஈடுபட்டன. கி.பி.1775-இல் துவங்கிய இந்த புரட்சிகர யுத்தத்திற்கு ‘AMERICAN REVOLUTIONARY WAR’ அல்லது ’அமெரிக்க புரட்சிப்போர்’ என்று பெயர். யுத்தத்தின் முடிவில், 1776-ஆம் ஆண்டு ஜூலை 4-இல் சுதந்திர அமெரிக்கா பிரகடனம் செய்யப்பட்டது. ஆனாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுமையாக உருவாவதற்கு 1789 வரையிலான காலக்கட்டம் தேவைப்பட்டது. அந்த ஆண்டில் தான் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.   

மீண்டும் அமெரிக்காவிடம் தோல்வி கண்ட பிரிட்டன்!

1812 –இல் சுதந்திர அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் மீண்டும் யுத்தம் உண்டானது. வரலாற்றாசிரியர்கள் இதனை, ‘WAR OF 1812’ அதாவது ’1812 யுத்தம்’ என்றே குறிப்பிடுகின்றனர். மேற்கு ஐரோப்பாவில் ’நெப்போலியனிக் வார்ஸ்’ எனப்படும் பிரான்ஸின் ’நெப்போலியனின் யுத்தங்கள்’ மும்முரமாக நிகழ்ந்த காலக்கட்டத்தில் உண்டான இந்த யுத்தம், 1815 வரைக்கும் தொடர்ந்தது. இந்த யுத்தம், அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு பிரிட்டன் உண்டாக்கிய தடைகளால் நிகழ்ந்தது. இந்த போரிலும் அமெரிக்காவிடம் பிரிட்டன் படைகள் தோல்வி கண்டன.  

பிரிட்டனிடமிருந்து பிடுங்கப்பட்ட அமெரிக்கக் கழுகின் செட்டைகள்!

இப்படியாக, கிரேட் பிரிட்டன் எனும் சிங்கத்திடமிருந்து அமெரிக்கா எனும் கழுகின் செட்டைகள் பிடுங்கப்பட்டன. அதற்குப் பிறகான வரலாற்றில் பிரிட்டன் வீழ்ச்சியடைந்து, அமெரிக்கா உலக வல்லரசாக உயர்ந்தது.    

மொத்தமாக முடிவுக்கு வந்த பிரிட்டனின் ஆதிக்கம்!

இரண்டாம் உலகப்போரின் முடிவுகள், பிரிட்டனை உலக அரங்கில் பின்னுக்குத் தள்ளின. பல காலனி நாடுகளும் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றுக்கொண்டன. 1956-இல் இஸ்ரேல் மற்றும் ப்ரான்ஸூடன் இணைந்து, எகிப்துக்கு எதிராக பிரிட்டன் தொடுத்த சூயஸ் போர், உலக அரங்கிலும் உள்நாட்டிலும் பிரிட்டனுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த யுத்தத்தோடு, பிரிட்டன் என்ற வல்லரசின் ஆதிக்கம் உலக அரங்கில் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *