பேராளுமை 1 : காந்தியின் கதை!

உலக நாடுகளின் விடுதலை போராட்டங்கள் எல்லாம் ரத்த சரித்திரங்களாக எழுதப்பட்டு கொண்டிருக்கும்போது, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை என்னும் மொழியால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் நின்று போராடிய ஒரே தலைவர் காந்தியடிகள். உலகிலேயே அகிம்சை என்னும் புதிய போராட்ட வடிவை கையில் எடுத்து, எத்தனை இடர்ப்பாடுகள் வந்த போதும் அஹிம்சை வழியில் துளியும் பிசகாமல் இவரால் எப்படி  ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை வழி நடத்த முடிந்தது… எப்படி அதற்கு அவர் தன்னை தயார்படுத்திக்கொண்டார்  என்பது பற்றி இங்கே இப்போது விரிவாக காணலாம்…..

தான் பிறந்த இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவிற்கு வெளியேயும் கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படுகிற ஒரு மிகப்பெரும் தலைவர் காந்தி. 1930 ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டார் காந்தி. டைம் இதழ் தேர்வில் இப்போது வரைக்கும்  இந்தியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் காந்தி மட்டுமே. இறந்து எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்திய மனங்களில் அவருக்கான இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் என்னும் கிராமத்தில் பிறந்தார் காந்தி. கரம்சந்த் காந்தி – புத்திலி பாய் என்னும் இவருடைய  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தியின் தந்தையான கரம்சந்த் காந்தி போர்ப்பந்தர் பகுதியின் திவானாக இருந்தவர். தாய் புத்லி பாய் கரம்சந்த் காந்திக்கு நான்காவது மனைவி. வீட்டின் கடைசி பிள்ளையான காந்திக்கு இரண்டு சகோதரர்களும்  ஒரு சகோதரியும் இருந்தனர். காந்தியின் தாயான புத்லி பாய் மிகுந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும்,  இளமையில் காந்தி தன்  குடும்ப நம்பிக்கைகளுக்கு எதிரான இறைச்சி உண்ணுதல் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கொண்டவராகவே இருந்திருக்கிறார். பள்ளி படிப்பிலும் சுமாரான மாணவராகவே இருந்த காந்தி தன் பதின் மூன்றாம் வயதில் தன் வயதை கொண்ட கஸ்தூரிபா காந்தியை திருமணம் செய்து கொண்டார்.

பள்ளி படிப்பை நிறைவு செய்த காந்தி 1888 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள இன்னர் டெம்பிள் என்கிற சட்ட கல்லூரியில் சட்டம் படிக்க சென்றார். 1891 ல் தனது சட்ட படிப்பை முடித்த காந்தி  பாரிஸ்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார். பின்பு சில காலம் பம்பாய் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய பிறகு குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்பான படிவங்களை நிரப்பி தரும் எளிய பணிகளை செய்து வந்தார்.

1893 ஆண்டு ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லா கம்பெனி என்ற இந்திய கம்பெனி மூலம் காந்திக்கு  தென்னாப்பிரிக்காவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக  1915ஆம்  ஆண்டு வரை சுமார் 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவின்  நாட்டல் மாகாணத்தில் உள்ள டர்பன் நகர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார் காந்தி. தென்னாப்பிரிக்கா செல்லும் வரைக்கும் காந்தி எந்த வித அரசியல் ஈடுபாடு இல்லாதவராக தான் இருந்து வந்தார். ஆனால் அங்கு நடந்த இரண்டு முக்கியமான சம்பவங்கள் அவரை தானாகவே அரசியல் சுழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியதுன.  அப்போது தொடங்கிய அரசியல் பயணம் தான் அவரை இந்திய விடுதலை போராட்டம் வரைக்கும் இழுத்து கொண்டு வந்தது.

சத்தியாகிரகம் என்னும் அறவழிப் போராட்டத்தின் அடையாளமாக இருக்கும் காந்தி அந்த வகையான போராட்ட வழிமுறையை  முதன் முதலில் தென்னாப்பிரிக்க மண்ணில்தான் தொடங்கி வைத்தார். டிரான்ஸ் வால் நாடாளுமன்றத்தில் ஆசியர்களுக்கான தனிச்சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து ஒரு மிகப்பெரிய அகிம்சை போராட்டத்தை தொடங்கினார்.  பின்னாளில் அதுவே சத்தியாகிரகப் போராட்டம் என அழைக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் டிரான்ஸ் வால் பகுதியை விட்டு வெளியேற மறுத்ததற்காக காந்திக்கு இரண்டு மாதம் கடுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியர்களின் திருமணம், இந்திய தொழிலாளர்கள் மீதான 3 பவுண்ட் வரி விதிப்பு மற்றும் இந்தியர்களுக்கான அடையாள அட்டை என தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான பிரச்னைகளுக்கு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததால் காந்தி பலமுறை அங்கு சிறை செல்ல நேர்ந்தது. காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டங்கள் அவருக்கு இந்தியாவிலும் ஓர் அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தி இருந்தது என்றாலும் காந்தியின்  தென்னாப்பிரிக்க செயல்பாடுகள் பற்றி விமர்சன ரீதியிலான கருத்துக்களும் உண்டு. இந்நிலையில், 1915 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்பினார்.

காந்தி இந்தியா வந்ததும் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். காங்கிரசில் இருந்த மிதவாதியான கோபால கிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களுடன் காந்தி மிக நெருக்கமாக பழகினார். ரவீந்திரநாத் தாகூர் காந்தியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டு காந்திக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கினார். அது முதல் காந்தி மகாத்மா காந்தி ஆனார். 1924 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனதும் கட்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்து இந்திய விடுதலைக்கான மாபெரும் இயக்கமாக காங்கிரசை வளர்த்தெடுத்தார். கட்சி உறுப்பினர்களும் நாட்டு மக்களும் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாள் காந்தியடிகள் அன்றைய மதராஸ் மாகாணத்தில் இருந்த மதுரைக்கு வந்த போது மதுரையில் அவர் கண்ட காட்சி அதுவரை இருந்த  காந்தியின் தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது.

1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தை தோற்றுவித்தார் காந்தியடிகள். ஜாலியன் வாலாபாக் படுகொலை, ரவுலட் சட்டம் ஆகியவற்றிற்கான எதிர்ப்பாகவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியர்களுக்கான அதிகார குறைப்பை கண்டித்தும் பிரிட்டிஷ் அரசோடு எந்த விதத்திலும் ஒத்துழைப்பதில்லை என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. மாணவர்களை பிரிட்டிஷ் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் வழக்கறிஞர்களை நீதி மன்றங்களை புறக்கணிக்க சொல்லியும் காந்தி வலியுறுத்தினார். ஆனால் ஒத்துழையாமை இயக்கம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்போதே காந்தியடிகள் அதை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதனால்  இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஓத்துழையாமை இயக்கம் 1922-ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதற்கு 1922ல் உத்திர பிரதேசத்தில் நடந்த சௌரா சௌரி சம்பவமே காரணமாக அமைந்தது.

1929 ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் பல புதிய உப்புச்சட்டங்களை இயற்றியது. இதனால் இந்தியர்கள் யாரும் உப்பு தயாரிக்கவும் விற்பனை செய்யவும் முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர்களின் இந்த சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் 1930 ஆண்டு மார்ச் மாதத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். உப்பு சத்தியாகிரகத்தின் முக்கிய நடவடிக்கையாக தண்டி யாத்திரை நடைபெற்றது.

1942 ஆம் ஆண்டு ’வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கினார் காந்தியடிகள். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த மிக தீவிரமான இறுதி போராட்டமாக இது அமைந்தது. ’செய் அல்லது செத்து மடி’ என்னும் காந்தியின் புகழ் பெற்ற போராட்ட போர்க்குரல் இந்த போராட்டத்தில் இருந்தே உதயமானது. 1942 ஆம் ஆண்டின் ஆகஸ்ட்டு மாதத்தில் தொடங்கிய போராட்டம் என்பதால் இது ’ஆகஸ்ட் புரட்சி’ என்றும் அடையாளப்படுத்தப் பட்டது. இந்த போராட்டம் தான் இந்திய விடுதலை போராட்டத்தை ஒரு பொது மக்களின் போராட்டமாக மாற்றியது.

1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன்  பிரபு நியமிக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு மவுண்ட் பேட்டனுக்கு அறிவுறுத்தி இருந்தது. எனவே மவுண்ட் பேட்டனும் இந்திய தலைவர்களுடன் அது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இந்திய பாகிஸ்தான் பிரிவினை அப்போது ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்தி இருந்தது. எனவே ஆங்கிலேயே அரசு இந்தியாவிற்கு முன்னதாகவே சுதந்திரம் வழங்கும் முடிவுக்கு வந்தது.

1947 ஜூலை 18 ஆம் தேதி அன்று மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளிவந்தது. அதென்னவெனில், 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்கு சுத்தந்திரம் வழங்கப்படும் என்பதே. அந்த அறிவிப்பின் படி 1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. கல்கத்தா அருகே உள்ள நவ காளியில் ஏற்பட்ட ஓர் மத கலவரம் காரணமாக சுதந்திரம் அறிவிக்கப்பட்ட அன்று காந்தியால் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள்  இந்திய வன்முறை வரலாற்றின் மிக கொடிய நாளாக விடிந்தது ..

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தி தனது இறுதி நாட்களில் டெல்லியில் உள்ள பிர்லா பவன் என்ற இடத்தில் தங்கி இருந்தார். 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணி அளவில், தான் தங்கி இருந்த பிர்லா பவனில் இருந்து அந்த வீட்டின் தோட்டத்தில் அமைந்திருக்கும் பிர்லா மந்திருக்கு சென்று கொண்டிருக்கும்போது, காக்கி உடை அணிந்த ஒருவர் அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்து திடீர் என  வெளிப்பட்டு காந்தியை மார்பு மற்றும் வயிற்று பகுதியில் மூன்று முறை சுட்டார். ஒரு கடவுளின் பெயரை கடைசியாக உச்சரித்தபடி சரிந்து கீழே விழுந்து தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் காந்தி.

காந்தியின் இந்த படுகொலை வழக்கில் நாதுராம் விநாயக் கோட்ஸே, நாராயணன் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பாஹ்வா, ஷங்கர் கிஸ்ட்யா, கோபால் கோட்சே, தத்தாத்ரேயா பர்ச்சுரே சாவர்க்கர் ஆகிய எட்டுப்பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 1949 பிப்ரவரி 10 ஆம் நாள் வெளியான இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில், நாதுராம் விநாயக் கோட்ஸே நாராயணன் ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும் சாவர்க்கர் தவிர மீதமுள்ள அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. சாவர்க்கர் மட்டும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியா ஒரு பரந்து விரிந்த தேசமாக ஒன்று பட்டு இருக்க வேண்டும் என்றும் இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வேற்றுமைகளின் அடிப்படையில் பிரிந்து நிற்காமல் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பதே கடைசி  வரை காந்தியின் விருப்பமாக இருந்து வந்தது. அதனால் இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் அவர் எப்போதும் உடன்படாதவராகவே இருந்து வந்தார். இந்து சமய நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டவராகவும் இந்து மத சம்பிரதாயங்களை கடைபிடிப்பவராகவும் இருந்தாலும் தீவிர இந்துக்கள் மத்தியில் அவர் ஒரு இஸ்லாமிய சார்பு உடையவராகவும்,  இந்துக்கள் அல்லாத மற்றவர்கள் அவரை ஒரு இந்து சார்பு உடைய தலைவராகவும் தான் பார்த்தார்கள். தான் ஒரு மதச்சார்பற்ற தலைவர் என்று மக்கள் மத்தயில் ஒரு அபிப்ராயத்தை உருவாக்க முயன்ற அவரின் முயற்சி வென்றதா என்பது இப்போது வரைக்கும் முற்றுப்பெறாத கேள்வியாகவே இருந்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான முன்னேற்றப் பணிகளில் காந்தி தன்னை விரும்பி இணைத்துக்கொள்பவராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமை தனித்தொகுதிகள் போன்றவற்றில் எதிர் கருத்துக்கள் கொண்டவராகவே இருந்து வந்தார். இப்படி பல்வேறு முரண்கள் இருந்தாலும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு மகத்தான ஒன்றாகவே இருந்திருக்கிறது. அதனாலேயே இன்றுவரை அவர் இந்தியாவின் தேசத்தந்தை என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

செந்தில் குமார்

மூத்த ஊடகவியலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *