நியான்டர்தால் எனப்படும் மனிதர்கள் தான் ப்ரான்சில் துவக்கத்தில் வாழ்ந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். டார்டோக்னெ எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர்களுடைய எலும்புகள் 19 ஆம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்றன.
கி.மு. 1500 க்கும் 500க்கும் இடைப்பட்ட ஆயிரம் வருட காலக்கட்டத்தில் செல்டிக் கவுல்ஸ் எனப்படும் இனத்தினர் ப்ரான்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தனர். இவர்கள் கி.மு. 600 வாக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் கிரேக்கர்களுடன் தங்கள் வாணிகத் தொடர்புகளை உருவாக்கினர். அடுத்த 300 வருடங்களில் அந்த செல்டிக் பாரிசி எனும் பழங்குடிகளுக்கென குடியிருப்புகள் உருவாகின. அப்படி அன்று உருவாக்கம் கண்ட குடியேற்றக் குடியிருப்புகள் தான் இன்று ப்ரான்சின் தலைநகர் பாரிஸாக உருவெடுத்து நிற்கிறது. அவர்களுக்கென கவுல் எனும் ராஜ்ஜியமும் உருவானது.
கவுல் இராஜ்ஜியமானது ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசரினால் கி.மு. முதலாம் நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, அவன் வடக்கு ப்ரான்சில் உள்ள விஸ்ஸான்ட் என்ற பகுதியைப் பயன்படுத்தி பிரிட்டனுக்குள்ளும் ஊடுருவினான். 5 ஆம் நூற்றாண்டு வரை கவுலியா மீது நீடித்த ரோமானியர்களின் ஆளுகையின் விளைவாக, அநேக மாற்றங்கள் உண்டாகத் தொடங்கின.
ரோமானியப் பேரரசன் ஜூலியஸ் சீஸர் கி.மு.55-இல் பிரிட்டனுக்குள் ஊருடுவ வடக்கு ப்ரான்சில் உள்ள விஸ்ஸான்ட் என்ற பகுதியையே பயன்படுத்தினான். அதுமுதல் அன்றைய ப்ரென்சுக்காரர்களுக்கு ரோமானியர்களோடு உடன்படிக்கைகளின் அடிப்படையிலான தொடர்புகள் உண்டாகின. அந்தத் தொடர்பின் வாயிலாக பிரான்சில் கோவில்களும் பொதுக்கட்டிடங்களும் உருவாகின. அவை இன்றைய ப்ரான்சின் தொன்மை அடையாளங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஒன்றாக இருக்கிறது lyon நகரில் உள்ள பண்பாட்டு அருங்காட்சியகம் ஒன்று.
ஆம். கவுலியர்கள் காலப்போக்கில், தமது மொழியான கவூலியை விட்டு ரோமர்களின் மொழியான இலத்தீனை தொடர்பு மொழியாக பயன்படுத்தத் தொடங்கினர். அது பின்னர் பிரெஞ்சு மொழியாக மாற்றம் கண்டது.
கலாச்சார அளவிலும் ரோமர்களின் வழக்கங்களே கவுலியர்களின் வழக்கங்களாகின.
ரோம தொடர்பின் வாயிலாக கோவில்களும் பொதுக்கட்டிடங்களும் உருவாகின. அவை இன்றைய ப்ரான்சின் தொன்மை அடையாளங்களாக விளங்குகின்றன. இதற்கிடையில், 5-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரோமானியப் பேரரசு ஜெர்மானியப் பழங்குடிகளால்
தொடர் தாக்குதல்களை சந்தித்து வீழ்ச்சி அடைந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த அன்றைய ஐரோப்பிய இனங்களும் அவர்களின் பிரதேசங்களும் விடுவிக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக அன்றைய கவுலியாவான ஃப்ரான்ஸூம் விடுவிக்கப்பட்டது.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை ப்ரான்ஸ் நிலப்பரப்பானது ரோமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தது. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ரோமானியப் பேரரசு ஜெர்மானியப் பழங்குடிகளால் தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வீழ்ச்சி அடைந்த பிறகு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த அன்றைய ஐரோப்பிய இனங்கள் விடுவிக்கப்பட்டன. அதில் ஒன்றாக ஃப்ரான்ஸூம் விடுவிக்கப்பட்டது.
ரோமானியப் பேரரசுக்கு ஓர் முடிவு கட்டிய ஜெர்மானியப் பழங்குடிகள் மேலும் பலமடைந்து, ஐரோப்பாவில் புதிய அரசுகளையும், பேரரசுகளையும் நிர்மாணிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் நிர்மாணித்த ஃப்ரான்கிஷ் பேரரசின் மேற்கு பகுதிதான், பிற்காலத்தில் ஃப்ரான்ஸ் நாடாகவும், கிழக்குப் பகுதி ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளாகவும் மாற்றம் கண்டன.
அதேபோல, ரோமன் பிரிட்டன் என்ற தீவுக்கூட்டங்களின் பகுதியில் ஜெர்மானிய ஆங்கிலோ மற்றும் சாக்ஸன் இனத்தவர் குடியேறி உருவாக்கிய சிற்றரசுகள் கி.பி. 927-இல் இங்கிலாந்து எனும் ராஜ்யமாக உருவெடுத்தது.
இவை மட்டுமில்லை… ஐரோப்பாவின் ஏனைய நாடுகளும் கூட இவை போன்ற ஜெர்மானியர்களின் இடம்பெயர்வுகளாலும் இனக்கலப்புகளாலும் தான் உருவாகின. ஐரோப்பா இடம்பெயர்வுகளால் புதிய வடிவம் காணத்தொடங்கிய கி.பி. 4 ஆம் நூற்றாண்டு துவங்கி, 7-ஆம் நூற்றாண்டு வரையான காலக்கட்டத்தை migration period அதாவது இடம்பெயர்வு காலம் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய நிலையில் ப்ரான்ஸ் எனக் குறிப்பிடப்படும் பிரதேசத்திற்கு ஃப்ராங்ஸ் என்றே பெயர் வழங்கி வந்தது. அதுதான் நவீன காலத்தில் ப்ரான்ஸ் என பெயர் மாற்றம் கண்டது. ரோமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட ப்ராங்ஸ் இன மக்கள், காலோ ரோமானியப் பண்பாட்டின் உட்கூறுகளை அப்படியே ஏற்றுக்கொண்டனர். உதாரணமாக ஐந்தாம் நூற்றாண்டில் கான்ஸ்டன்டைன் எனும் ரோமானியப் பேரரசனால் ரோம அரசின் மதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிறித்தவ மதமும் அப்படியே ப்ரான்சின் மதமானது. ஆக, இன்றைய ஃப்ரான்சானது ப்ராங்ஸ் எனும் பழங்குடிகளோடு ரோமானியப் பேரரசின், பிரிட்டனின் செல்டிக் இனத்தவர்களை இணைத்த ஜெர்மானியப் பண்பாட்டையும் கலந்து உருவானதே என்பதை அறிய முடிகிறது.
கி.பி. 5 ஆம் நூற்றான்டிலிருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை பிரான்ஸ் பிரதேசத்தை ஃப்ரான்கிஷ் மெரோவிங்கியன் மற்றும் கரோலிங்கியன் எனும் இரண்டு ராஜ்ஜியங்கள் ஆண்டன. அதில் கரோலிங்கியன் பேரரசில் இருந்து எழுச்சி பெற்ற சார்லெமெக்னே என்பவர், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளையும் தன் பேரரசில் இணைத்து, மேற்கு ஐரோப்பாவின் முதல் பேரரசராக உயர்ந்தார். இவருடைய ஹோலி ரோமன் பேரரசு எனப்பட்ட கரோலிங்கியன் பேரரசில் இருந்துதான் நவீன ப்ரான்ஸ், ஜெர்மனி நாடுகள் பிரிந்தன. 5 ஆம் நூற்றாண்டில் சிதறுண்ட ரோமப் பேரரசிற்கு பிறகு, மூன்று நூற்றாண்டுகள் கழித்து முதன்முறையாக, மேற்கு ஐரோப்பாவை வெற்றிகரமாக இணைத்த பெருமை சார்லெமெக்னேவையே சேரும் என்பதாலும், இன்றைய மேற்கு ஐரோப்பிய நாடுகளின் உருவாக்கத்திற்கு இவருடைய காலமே பலவிதங்களில் அடிப்படை என்பதாலும், சார்லெமெக்னே ஐரோப்பாவின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
சார்லெமெக்னெவுக்குப் பிறகு, கி.பி. 987-இல் ஹ்யூக் கேபெட் தலைமையில் உருவான
கேபிடயன் ராஜ்ஜியத்திற்கு பிறகான காலக்கட்டத்திலிருந்து, ப்ரான்ஸ் அடுத்த 800 வருடங்களுக்கு ஐரோப்பாவின் அதிபலம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக ஆளுமை கண்டது.
ஐரோப்பா கண்டத்தில் மிக பலம் வாய்ந்த பகுதி மேற்கு ஐரோப்பா தான். ஏனெனில், இப்பகுதியில் தான் ப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பாவின் அடையாளமான நாடுகள் எல்லாம் இருக்கின்றன. இந்நாடுகளை உள்ளடக்கி ஒருங்கிணைத்துதான் அன்றைய ரோமானியப் பேரரசு உலகத்தையே ஆண்டு வந்தது. இதே நாடுகளை உள்ளடக்கி தான் ஃப்ராங்சின் சார்லெமெக்னே இரண்டாவது மேற்கு ஐரோப்பியப் பேரரசு ஒன்றை உருவாக்கினார். அதே மேற்கு ஐரோப்பிய நாடுகள் தான் வெஸ்டர்ன் யூரோப்பியன் யூனியன் என்ற பெயரில் 2012 வரை ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. அவைதான் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஃப்ரான்ஸ் பிரதேசத்தை ஆண்ட மன்னர்களில் புகழ்பெற்றவர் பதினான்காம் லூயி. 1643-இல் தன் நான்கு வயதில் ஃப்ரான்ஸ் தேசத்தின் மன்னராக அரியணை ஏறிய இவர், தன் 27 ஆம் வயதில் முழுமையான ஆளும் அதிகாரத்தைப் பெற்றார். இவர்தான் ஐரோப்பிய அரசர்களின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 72 வருடங்கள் 110 நாட்கள் அரசாண்ட அரசன். ப்ரான்சின் முடியாட்சி வரலாற்றில் அதிபலம் வாய்ந்த மன்னனாக விளங்கிய பதினான்காம் லூயி, ப்ரான்சில் எஞ்சியிருந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் மையப்படுத்தப்பட்ட ஆளும் முறையை கொண்டு வந்தார். இவருடைய காலத்தில் ப்ரான்ஸ் ஐரோப்பிய கண்டத்தில் மிக பலமான நாடாக விளங்கியது.
14 ஆம் லூயிக்குப் பிறகு ப்ரான்ஸின் அரியணை ஏறிய அவரது பேரன் கோமாளியாய் காட்சியளித்தார். குடிமக்களின் தேவைகளுக்குப் பொருந்தாததாய் அரச கட்டளைகள் முரண்பாடுகளாய் இருப்பதை ஒரே நேரத்தில் உதித்த மூவர் முன்னுரைத்தனர். வால்டேர், ரூசோ மற்றும் மான்சடெஸ்க்யூ எனும் அந்த மூவரும் ஃப்ரெஞ்சு குடிமக்களிடையே அறிவொளி வீசும் விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பினர்.
ஆஸ்திரியா, பிரிட்டன் மற்றும் பிரஷ்யா நாடுகளுக்கு எதிராக ஏழு வருடங்கள் 15ஆம் லூயி செய்த போர்கள், ஃப்ரான்சை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்பவையாக மாறின. அப்போர்களின் விளைவாக, கனடா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியாவில் தனக்கென காலனி ஆதிக்கப்பகுதிகளாக்க மலர்ந்து கொண்டிருந்த குடியேற்றப் பகுதிகளை ப்ரான்ஸ் பிரிட்டனிடம் இழக்க வேண்டி வந்தது. முடியாட்சியில் ஏற்பட்ட இதுபோன்ற தோல்விகளும் அதன் விளைவுகளும் குடியாட்சி கருத்துகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தின. அந்நேரத்தில் அமெரிக்கப் புரட்சியால் அந்நாட்டில் குடியாட்சி மலர்ந்ததைக் குறித்த செய்திகளும் உலக அளவில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி இருந்தன. அதுவும் வால்டேர் ரூசோ போன்றவர்களின் புரட்சி கருத்துகளுக்கு வலு தந்தன.