சோவியத் யூனியன் : எழுச்சியும் சிதைவும்

எழுத்துநர் : மஞ்சுளா பிச்சை அவர்கள்

இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றின் மிகப் பெரிய மாற்றங்களின் காலம். அதில் முக்கியமான அத்தியாயமாக சோவியத் யூனியனின் எழுச்சி மற்றும் அதன் சிதைவு திகழ்கிறது. 1917ல் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியால் மக்கள் பட்டினி, வறுமையில் துடித்துக் கொண்டிருந்த போது, லெனின் தலைமையிலான சோஷியலிச புரட்சி வெடித்தது. ஜார் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்து, சோசியலிசக் கொள்கை மக்கள் மத்தியில் பரவியது. 1922ல் ரஷ்யாவுடன் இணைந்த பகுதிகள் தங்களை “சோவியத் யூனியன்” என அறிவித்தன.

1924ல் லெனின் மறைந்த பின் ஸ்டாலின் தலைமை ஏற்றார். அவரது ஆட்சியில் கம்யூனிச கொள்கையும் தனிமனித ஆதிக்கமும் நிலவியது. அரசை எதிர்த்தோரை, விமர்சித்தோரை “குலாக்” என்ற அடிமைத்தொழில் முகாம்களில் சிறைபிடித்து வைக்கவோ அல்லது கொலை செய்யவோ அவர் தயங்கவில்லை. கொடூர முகமும் கம்யூனிச கொள்கையும்  இணைந்து, 1924 முதல் 1953 வரை அவர் சோவியத் யூனியனை இரும்புக்கையால் வழிநடத்தினார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் சோவியத் யூனியன் பெரும் சக்தியாக திகழ்ந்தாலும், அதன் பின் அமெரிக்காவுடன் பனிப்போர் தீவிரமடைந்தது.

ஸ்டாலின் மரணித்த பின் ஆட்சிக்கு வந்த  தலைவர்கள் சற்று மிதமான கொள்கைகளைப் பின்பற்றினர்.  ஆனாலும், ஆயுத உற்பத்தி, விண்வெளிப் போட்டி, அமெரிக்காவுடன் அரசியல் எதிர்ப்பு ஆகிய காரணங்களால் மக்கள் வாழ்வு பாதிக்கப்பட்டது. சோவியத் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே சார்ந்திருந்தது. 1970–80களில் எண்ணெய் விலை வீழ்ந்ததால் பொருளாதாரம் சீர்குலைந்தது. மக்கள் பசியிலும் பட்டினியிலும் தவித்தனர். மேலும், 1986-ல் செர்னோபில் அணு உலை வெடிப்பு உலகளாவிய அளவில் சோவியத் மீதான நம்பிக்கையை குலைத்தது.

1985ல் மிக்காய்ல் கோர்பச்சேவ் அதிகாரம் ஏற்றார். அவர் (அரசியல் திறந்த நிலை) மற்றும்  (பொருளாதார மறு சீரமைப்பு) என்ற புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். மக்கள் அரசை விமர்சிக்கலாம், அரசியலில் பங்கேற்கலாம் என்ற சுதந்திரங்களை வழங்கினார். சிறிதளவு தனியார் வியாபாரம் செய்ய அனுமதித்தார். இதனால் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகள் எழுந்தன. ஆனால், அதே சமயம் பல குடியரசுகள் சுதந்திரம் கோரத் தொடங்கின. பால்டிக் நாடுகளான லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா முதலில் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து செல்லத் தொடங்கின.

1991 ஆகஸ்டில் கோர்பச்சேவை ஆட்சியிலிருந்து அகற்ற எட்டு முக்கிய தலைவர்கள் முயன்றனர். ஆனால் மக்கள் போராட்டத்தின் காரணமாக அவர் மீண்டும் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் கம்யூனிசக் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் சுதந்திரம் தேடியபோது, மேற்கத்திய நாடுகளும் புதிதாக உருவாகும் குடியரசுகளுக்கு தூதரக ஆதரவை அளித்தன. இதனால் சோவியத் யூனியனின் சிதைவு வேகமடைந்தது.

இறுதியாக, 1991 டிசம்பர் 25 அன்று மாஸ்கோவில் க்ரெம்லின் அரண்மனையில் பறந்துகொண்டிருந்த சிவப்பு கொடி இறக்கப்பட்டது. அதன்மூலம் சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக கலைந்தது. ஒருகாலத்தில் உலகின் ஆறில் ஒரு பங்கை கொண்டிருந்த, நூற்றுக்கும் மேற்பட்ட இனங்களை ஒன்றிணைத்த அந்த பேரரசு, 15 தனிநாடுகளாகப் பிரிந்தது..

ஒன்றிணைந்த சோவியத், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக  இருந்திருக்கும்… ஆனால் வரலாறு வேறு பாதையில் சென்றுவிட்டது. சோவியத் யூனியன் எழுச்சியும் வீழ்ச்சியும், அதிகாரத்தின் கொடுமையும், சுதந்திரத்தின் தாகமும், பொருளாதார சிக்கல்களும் இணைந்த மிகப் பெரிய வரலாற்று பாடமாக உலகில் இன்று வரை திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *