காசாவில் நிரந்தர அமைதிக்காக அமெரிக்காவின் 21-அம்சத் திட்டம் வெளியீடு

வாஷிங்டன் — காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் மோதல்களையும் இரு தரப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதியை உறுதிசெய்யவும், அமெரிக்கா தனது 21-அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுவே மோதலை நிறுத்துவதற்கான மிக விரிவான முயற்சி என அமெரிக்கா கூறியது.

இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இரண்டு மாநிலத் தீர்வு மட்டுமே நிலைத்த தீர்வு எனக் கூறிய நிலையில், ஆறு மாதங்களாக அமெரிக்கா இந்த திட்டத்தை உருவாக்கியது. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்: பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் ஆகியோர்.

21-அம்ச திட்டத்தின் முழு பட்டியல் மற்றும் விரிவான விளக்கம்

1. பணயக் கைதிகள் விடுதலை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இருவரும் திட்டத்தை ஏற்றுக்கொண்ட 48 மணி நேரத்திற்குள், ஹமாஸ் கையில் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் – உயிருடன் உள்ளவர்களும், இறந்தவர்களும் –  ஒப்படைக்கப்பட வேண்டும்.

2. மனிதாபிமான உதவி விநியோகம்

உணவு, மருந்து, குடிநீர் போன்ற உதவிகள் முழுமையாக ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளால் மட்டுமே நிர்வகிக்கப்படும்.

3. நிரந்தர போர் நிறுத்தம்

மோதல் மீண்டும் தொடங்காதபடி, இருதரப்பும் சட்டரீதியாக உறுதிமொழி அளிக்க வேண்டும். இது “தற்காலிக நிறுத்தம்” அல்ல; நிரந்தரமாக போரை நிறுத்தும் உறுதி ஆகும்.

4. இஸ்ரேல் படைகள் பின்வாங்குதல்

காசாவின் நகர்ப்புறப் பகுதிகளில் இருக்கும் படைகள் படிப்படையாக பின்வாங்க வேண்டும்.

5. பாலஸ்தீன கைதிகள் விடுதலை

இஸ்ரேலில் வாழ்நாள் சிறை அனுபவித்து வரும் 250 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். கூடுதலாக, போர் தொடங்கிய பிறகு கைது செய்யப்பட்ட 1700 க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்படுவார்கள்.

6. காசா மறுகட்டமைப்பில் அரபு நாடுகளின் பங்கு

எகிப்து, கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகள் காசா மறுகட்டமைப்பிற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க வேண்டும்.

7. காசா–எகிப்து எல்லை திறப்பு

காசா மக்கள் உலகத்தோடு சுதந்திரமாக தொடர்பு கொள்ள எகிப்து எல்லை நிரந்தரமாக திறக்கப்படும்.

8. அவசர உதவிகள்

காசாவில் உடனடி மருத்துவம், உணவு, குடிநீர் உதவிகள் விரைவாக விநியோகிக்கப்படும்.

9. சர்வதேச மறுவாழ்வு நிதி

ஒரு பெரிய சர்வதேச நிதி அமைப்பு உருவாக்கப்பட்டு, காசா மறுவாழ்வுக்கான நிதி வெளிப்படையாக பயன்படுத்தப்படும்.

10. அடிப்படை வசதிகள் மீள்கட்டமைப்பு

மின் உற்பத்தி நிலையங்கள், நீர்வழங்கல் அமைப்புகள், கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக மீண்டும் கட்டமைக்கப்படும்.

11. ஹமாஸ் ஆயுத ஒப்படைப்பு

ஹமாஸ் தனது ராக்கெட்டுகள் மற்றும் கனரக ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்க வேண்டும். தேவையெனில், அவர்கள் காசாவில் தங்கினாலும் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றாலும், பாதுகாப்பான வாழ்வதற்கு சர்வதேச உதவி வழங்கப்படும்.

12. பன்னாட்டு கண்காணிப்பு படைகள்

காசாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஐ.நா. அல்லது அரபு நாடுகளின் படைகள் அமைக்கப்படும். இதில் பாலஸ்தீனியர்கள் நேரடியாக பங்கு கொள்ளலாம்.

13. பாலஸ்தீன நிர்வாக சீர்திருத்தங்கள்

காசா மற்றும் மேற்கு கரையின் அரசியல் நிர்வாகத்தில் முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

14. ஹமாஸ் அரசியல் கிளை பங்கேற்பு

ஹமாஸ் அரசியல் பிரிவு அமைதியான முறையில் பாலஸ்தீன அரசியலில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

15. சுதந்திரமான போக்குவரத்து

பாலஸ்தீனர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமாகச் செல்லும் உரிமை உறுதி செய்யப்படும்.

16. உள்கட்டமைப்பு மீள்கட்டமைப்பு

சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் ஆகியவை விரைவாக மீண்டும் கட்டமைக்கப்படும்.

17. அகதிகளுக்கான திட்டம்

பாலஸ்தீன அகதிகள் தங்களது வீடுகளுக்கும் சமூகங்களுக்கும் திரும்புவதற்கான மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும்.

18. தாக்குதல் நிறுத்தம்

ஹமாஸ் அல்லது பிற அமைப்புகள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினால், அது திட்டத்தை உடைத்துவிடும் என எச்சரிக்கை.

19. சுயாட்சி உரையாடல்

பாலஸ்தீனர்களின் சுயாட்சி மற்றும் எதிர்கால நாட்டின் நிலை குறித்து அரசியல் உரையாடல் தொடங்கப்படும்.

20. எல்லை பாதுகாப்பு

இஸ்ரேல் எந்த காரணத்திற்கும் காசா அல்லது மேற்கு கரையை இணைக்கக் கூடாது; நிர்வாகம் பன்னாட்டு கண்காணிப்பில் மட்டுமே மேற்கொள்ளப்படும்.

21. சட்டரீதியான நீண்டகால அமைதி உறுதி

இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன பிரதிநிதிகள் அனைவரும் கையெழுத்திடும் சட்டரீதியான அமைதி ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த சமாதான அம்சங்கள் பற்றிய தனது உரையில் ட்ரம்ப், “இஸ்ரேல் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், அமெரிக்கா இனி இஸ்ரேலை ஆதரிக்காது; அது முற்றிலும் கைவிடப்படும்” என்றார். மறுபுறம், ஹமாஸ் இந்த அமைதி திட்டத்தை மறுத்துவிட்டால், “இஸ்ரேலின் பதிலடிக்கு அமெரிக்கா எந்தவித பொறுப்பும் ஏற்காது” என்றும்  அதாவது, ஹமாஸ் மறுத்தால் அதனால் உருவாகும் விளைவுகளை அது தனியாகச் சந்திக்க வேண்டியிருக்கும்; அந்த சூழ்நிலையில் சர்வதேச ஆதரவோ, பாதுகாப்போ வழங்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார்.  

இஸ்ரேல், தனது பாதுகாப்பு உறுதிப்பாடுகளை தொடர விரும்புகிறது.  குடிமக்களின்  பாதுகாப்பு எங்களின் முதன்மையான கடமை” என்று பிரதமர் நெதன்யாகு கூறினார். அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், சில முக்கியமான நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். காசா எல்லைகளில் பாதுகாப்பு சுவரும் கண்காணிப்பும் தொடர வேண்டும், மேலும் இஸ்ரேல் தனது பாதுகாப்புக்காக தேவையான நேரங்களில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

நெதன்யாகுவின் கோரிக்கைகள், ஒரு புறம் இஸ்ரேல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு இருந்தாலும், மறுபுறம் பாலஸ்தீனியர்களின் முழுமையான சுயாட்சியை குறைக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் காரணிகளை உடையவையா என்றும் நோக்க வேண்டியதிருக்கிறது.

இந்நிலையில் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தாஹ் அல்-சிசி இந்த திட்டத்தை “மிகச் சிறந்த திட்டம்” என்று வரவேற்றுள்ளார்; மேலும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ, ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற நாடுகள் இதை மிதமான தீர்வு என பாராட்டியுள்ளன.

MANJULA PICHAI

JOURNALIST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *