Manjula Pichai
Journalist, Niruban Mediaஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடம் ஒருமுறை நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் உலகின் அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி உரையாற்றும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அழைக்கப்பட்டு உரையாற்றினார். அவர் மேடையேறியவுடன் டெலிப்ராம்ப்டர் செயலிழந்ததால், “இனி இதயத்திலிருந்து பேசப் போகிறேன், ஆனால் இதற்குக் காரணமானவரின் வேலை ஆபத்தில் உள்ளது” என சிரிப்போடு உரையைத் தொடங்கினார்.
ட்ரம்ப் தனது பேச்சில் உலகில் மிகப்பெரிய ஆபத்து நியூக்ளியர் ஆயுதங்களும் பயோ ஆயுதங்களும் தான் என எச்சரித்தார். “சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பற்ற பரிசோதனையால் உலகளாவிய தொற்று ஏற்பட்டது. அதுபோன்ற உயிரை குடிக்க கூடிய நுண்ணியிரிகள், பயோ ஆயுதங்கள் … மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.( உலகில் அதிக அணு ஆயுதம் வைத்திருப்பது ரஷ்யாவுக்கு அடுத்து அமெரிக்கா தான் )
ஹமாஸ்-இஸ்ரேல் போரைப் பற்றி அவர், “நான் அதை முடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் இரண்டு அல்லது நான்கு பேர் அல்ல, அனைத்து 20 பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். அப்படியில்லையெனில் போர் முடிவடையாது” எனக் கூறி சிரித்தார்.
அமெரிக்கா வலிமையான பொருளாதாரம், வலுவான எல்லைகள், வலுவான இராணுவம், வலுவான நண்பர்கள், வலுவான ஆன்மா ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு எனவும், இது அமெரிக்கர்களின் பொற்காலம் எனவும் தனது ஆட்சியை புகழ்ந்தார். உலக வெப்பமயமாதல் ஒரு “மிகப்பெரிய மோசடி” என்றும் பசுமை ஆற்றல் (solar, wind) விலை உயர்ந்த சதி என்றும் புதை படிவ எரிபொருட்கள் தான் மலிவு என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா, சீனா, ஐரோப்பா எல்லாம் கச்சா எண்ணெய் வாங்குவதால் போர் தொடர்கிறது என குற்றம் சாட்டினார். “இந்தியா-சீனா வாங்கும் பணத்தில்தான் ரஷ்யா போரை நடத்துகிறது” என்றும், நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடம் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நான் என்னால் இயன்ற வரியை உயர்த்தினேன் .. நீங்க அனைவரும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்
தான் ஏழு மாதத்தில் ஏழு யுத்தங்களை நிறுத்தியதாக பெருமை கூறிய ட்ரம்ப், “எகிப்து-எத்தியோப்பியா, காங்கோ-ருவாண்டா, இந்தியா-பாகிஸ்தான், கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஈரான், அர்மேனியா-அஜர்பைஜான், செர்பிய உள்நாட்டு போர் – இவை அனைத்தையும் நிறுத்தியது நான். ஐநா செய்ய வேண்டியதை நான் செய்தேன். ஆனால் பரிசுக்காக அல்ல, மக்கள் உயிர் காப்பாற்றுவதற்காக” என்றார்.
((ஐநாவின் VETO அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, UK, பிரான்ஸ்) உலக அமைதியை தீர்மானிக்கின்றன என்றாலும், காசா போரை நிறுத்த அமெரிக்கா ஒத்துழைக்கவில்லை ))
ஐநா உருவாக்கப்பட்டதே மற்றொரு நாடு மற்றொன்றின் எல்லையை மீறாமல் இருக்கத்தான். ஆனால் இன்று அது ஊடுருவலை ஊக்குவிக்கிறது என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார். “372 மில்லியன் டாலர் செலவில் 64,000 புலம்பெயர் மக்களுக்கு ஐநா உதவியுள்ளது. இதனால் நாடுகள் நாசமடைகின்றன. நாங்கள் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றுவோம். தெற்கு எல்லையில் கோடிக்கணக்கானோர் நுழைந்தனர். பைடன் ஆட்சியில் 4 ஆண்டுகளில் 25 மில்லியன் பேர் நுழைந்தனர். இப்போது நாங்கள் அதை நிறுத்திவிட்டோம்” என்றார்.
“ஐநா தடுக்க வேண்டிய இடையீடுகளை உருவாக்கி நிதி வழங்குகிறது. உலகின் பாதி தாண்டி வந்து எங்கள் எல்லைகளை மிதித்து, குற்றங்களைச் செய்து, எங்கள் சமூகத்தை பாதிக்க அனுமதிக்க முடியாது. திறந்த எல்லை முயற்சி தோல்வியடைந்தது. மேற்கத்திய நாடுகள் நரகத்துக்குச் செல்லப் போகின்றன” எனக் கூறிய ட்ரம்ப், லண்டனின் முதல் முஸ்லிம் மேயரான சதிக் கானையும் தாக்கினார்..
“நான் ஐநாவிலிருந்து பெற்றது ஒரு மோசமான எஸ்கலேட்டரும் ஒரு மோசமான டெலிப்ராம்ப்டரும் தான்” என கிண்டலடித்தார். தனது பேச்சின் இறுதியில், “ஐநா என்பது வெறுமனே கடிதம் எழுதும் இயந்திரம். வெற்று வார்த்தைகள் யுத்தங்களை நிறுத்த முடியாது” எனவும் கூறினார்.
👉 மொத்தத்தில், ட்ரம்பின் உரை தேசியவாதத்தையும், ஐநா மற்றும் பைடன் ஆட்சிக்கு எதிரான கடும் விமர்சனத்தையும், குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியது.
சிறப்பான கட்டுரை
நிருபன் செய்திக்குழு சார்பாக உங்களுக்கு எங்கள் நன்றிகள்.