– மஞ்சுளா
“#நெப்போகிட்” ஹாஷ்டேக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய இளைஞர் எதிர்ப்புப் பதிவு, நேபாளத்தின் அரசியல் அமைப்பையே உடைக்கும் அளவுக்கு பெரும் போராட்டமாக மாறியது
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற உலகளாவிய தளங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட வேண்டும், அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்று நேபாள அரசு உத்தரவிட்டது. பல நாடுகளில் இதுபோல் விதிமுறைகள் இருந்தாலும், நேபாளத்தில் தளங்கள் இணங்க மறுத்ததால் நேரடி தடையும் ஏற்பட்டது. இணையத்தில் வளர்ந்த தலைமுறைக்கு இந்தத் தடை ஏற்றதாகத் தெரியவில்லை.
காத்மாண்டுவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் “நேப்போ” மாடல்கள், அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். வேலையின்மை, வறுமை நிலைகளில் மக்கள் வாழும் நிலையில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பரமாக இருப்பதையும் வாரிசு அரசியலையும் பார்த்து கொதித்தனர். நேபாளத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 43% இளைஞர்கள் என்பதும் இந்த இயக்கத்துக்கு வலு சேர்த்தது.
கிராமப்புறங்களில் போராட்டம் குறைவாக இருந்தாலும், நகரங்களில் அது வன்முறையாக மாறியது. போலீசார் கண்ணீர்ப்புகை, ரப்பர் குண்டு பயன்படுத்தினர்; பின்னர் படையும் களமிறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களில் பலரை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக் கொன்றதும் பெரும் போராட்டமாக வெடித்தது.. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனியார் இல்லங்கள் உள்ளிட்ட பல அரசு கட்டிடங்களைத் தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் ஜலநாத் கானாலின் வீட்டில் ஏற்பட்ட தீயில் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தாக்குதலில் நிதியமைச்சர் தாக்கப்பட்டதாகவும், பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. போராட்டக்காரர்கள் “நாங்கள் இளம் பிரதமரை விரும்புகிறோம்” என்ற கோஷங்களை எழுப்பினர்.
மொத்தம் சுமார் 3 கோடி மக்களே உள்ள நேபாளத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை செய்கிற நேபாளர்களின் பணப்பரிமாற்றங்களின் (ரெமிட்டன்ஸ்) மீது — மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% — சார்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமை சுமார் 12.6% என உயர்ந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் 15 முறை அரசு மாறிய நிலையில் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதாக இளைஞர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அரசு , சமூக வலைத்தளத் தடையை பிறகு நீக்கிய போதிலும், போராட்டக்காரர்கள் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இரண்டின் தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகியுள்ளார்; இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பொறுப்பேற்று “சமாதானத்தையும் மக்களின் குரலையும்” கேட்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்த குழப்பம் இந்தியாவுக்கும் புதிய சவால்களை எழுப்பியுள்ளது. நேபாளத்தில் நிலைமை மோசமடைந்தால் எல்லைப் பகுதியில் அகதிகள் வருகை அதிகரிக்கும் அபாயமும், அதனால் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கும் சவால் ஏற்படும் அபாயமும் உள்ளது. சில வலிமையான வெளிநாட்டு சக்திகள் இந்த சூழ்நிலையை இந்தியாவை எதிர்த்து பயன்படுத்த முயல்வார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.
வல்லுநர்கள் எச்சரிக்கையில் கூறுவதாவது – ஊழல், சமத்துவம், டிஜிட்டல் உரிமைகள் ஆகியவற்றில் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்த முடியாவிட்டால், இது இன்னும் நீண்டகால அசாதாரண நிலைக்கு வழிவகுக்கும் என்பதும், இந்தியா உட்பட பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்திற்கும் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதும். நேபாளத்தின் இளைஞர்களின் கலவரம் அந்த நாட்டின் அரசியலில் ஒரு திருப்பு முனைப் புள்ளியாக மாறியுள்ளது.